தண்ணீருக்காகச் சாட் நாட்டில் ராணுவம் களம் இறங்கியுள்ள சூழலில், ராஜஸ்தான் வரலாற்றில் ஒரு தர்பூசணிப் பழத்திற்காக இரு நாடுகளுக்கு இடையே பெரும் போர் மூண்ட வரலாற்றுச் சம்பவம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் ‘மதீரா’ என்றால் தர்பூசணி, ‘ரார்’ என்றால் சண்டை. வெறும் பழத்திற்காக நடந்த சண்டையாகப் பார்க்காமல், இதைத் தனது குடிமகனின் ‘உரிமைக்கான போர்’ என்றே இன்றும் ராஜஸ்தான் மக்கள் போற்றுகின்றனர்.

அதாவது 16-ஆம் நூற்றாண்டில் பிகானேர் மற்றும் நாகூர் ஆகிய இரு சமஸ்தானங்களின் எல்லைப் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.  பிகானேரின் ‘சில்வா’ கிராமமும், நாகூரின் ‘ஜாகனியா’ கிராமமும் எல்லையில் ஒட்டி இருந்தன.பிகானேர் விவசாயி தனது நிலத்தில் தர்பூசணி பயிரிட்டிருந்தார். ஒரு கொடி மட்டும் எல்லையைத் தாண்டி நாகூர் விவசாயியின் நிலத்திற்குள் படர்ந்து சென்றது.

அந்தக் கொடியில் நாகூர் நிலப்பகுதியில் ஒரு தர்பூசணிப் பழம் காய்த்தது. பழம் பழுத்ததும் நாகூர் விவசாயி அதைப் பறித்தார். “பழம் என் நிலத்தில் இருப்பதால் அது எனக்குத்தான் சொந்தம்” என்பது அவர் வாதம். ஆனால், பிகானேர் விவசாயியோ, “கொடியின் வேர் என் நிலத்தில் இருப்பதால் பழம் எனக்குத்தான் சொந்தம்” என வாதிட்டார்.

விவசாயிகளுக்கு இடையே தொடங்கிய இந்தச் சண்டை, கிராமங்களுக்குப் பரவி, இறுதியில் இரு நாட்டு மன்னர்களின் காதுகளுக்குச் சென்றது. பிகானேர் மன்னர் கரண் சிங் மற்றும் நாகூர் மன்னர் அமர் சிங் ஆகிய இருவரும் தத்தமது விவசாயிகளின் பக்கம் நின்று படைகளைத் திரட்டினர். ஒரு பழத்திற்காக இத்தனை பெரிய போரா? எனப் பலரும் கேட்டபோது, “இது பழத்திற்கான போர் அல்ல, என் நாட்டு விவசாயியின் உரிமைக்கான போர்” என்பதே மன்னர்களின் பதிலாக இருந்தது.

1644-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் பயங்கரமான போரில், பிகானேர் மன்னர் கரண் சிங் வெற்றி பெற்றார். ஆயிரக்கணக்கான வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்தனர். இறுதியில் எந்த நிலத்தில் வேர் இருந்ததோ, அந்த விவசாயிக்கே பழத்தின் மீதான உரிமை வழங்கப்பட்டது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம், இன்றும் ராஜஸ்தான் பள்ளிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பாடங்களில் ‘சத்ரபதி ராசோ போன்ற வரலாற்று நூல்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது. இது கௌரவத்திற்காக நடந்த போர் என்பதை விட, கடைக்கோடி குடிமகனின் உரிமைக்காக ஒரு நாடே திரண்டதைக் குறிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.