சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவினர் எழுப்பிய மின்வெட்டு மற்றும் விவசாயப் பிரச்சனைகளுக்கு, பழைய வரலாற்றுப் புள்ளிவிவரங்களை முன்வைத்து தவெக அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு எத்தனையோ திருடர்களைப் பார்த்திருக்கிறது, அலிபாபாவும் 40 திருடர்களையும் கூட நீங்கள் கதைகளில் பார்த்திருப்பீர்கள்; ஆனால், அலிபாபாவும் ஃபியூஸ் கேரியர் திருடர்களையும் இப்போதுதான் எங்களுடைய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பார்த்துக்கொண்டு, அதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் ராஜ்மோகன் சாடினார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு மின்சாரத் தடையை முதன்முதலில் அறிமுகம் செய்ததே திமுக தான் எனப் புரட்சித்தலைவி அம்மா அவர்களே இந்த மாமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை நினைவுபடுத்தினார். அன்று கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தார், ஆனால் வீட்டில் கரண்ட் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையே பிளாக் அண்ட் ஒயிட்டாகப் போன காலங்களை யாரும் இன்னும் மறந்துவிடவில்லை என்று விமர்சித்தார். அதுமட்டுமன்றி, தமிழ்நாடு வரலாற்றிலேயே போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் மீது ‘குண்டாஸ்’ சட்டம் போட்டு சிறையில் அடைத்த ஒரே சர்க்கார் இந்த திமுக சர்க்கார் தான் என அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவையையே அதிர வைத்துள்ளார்.
