விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்குத் தள்ளாத வயதில் வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர், தனக்கு எப்படியாவது வாழ்வாதாரத்திற்கு வேலை வழங்க வேண்டும் என உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். தனக்கு இரண்டு கண்களும் தெரியாத காரணத்தினால், எங்கு சென்றாலும் வேலை இல்லை எனக் கூறி திருப்பி அனுப்புவதாக அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். மேலும், தனக்கு மூன்று பிள்ளைகள் இருந்தும் இந்தத் தள்ளாத வயதில் தம்மைக் கவனிக்க ஆளில்லாமல், வாழ்வாதாரத்திற்கும் அன்றாட உணவிற்கும் வழியின்றித் தவித்து வருவதாக அவர் அதிகாரிகளிடம் முறையிட்டார்.

​அரசாங்கத்தின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திலாவது தனக்கு வேலை வழங்கி, தனது வயிற்றுப் பசியைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த முதியவர் ஆட்சியர் அலுவலக வாசலில் நின்றபடி கதறினார். தள்ளாத வயதில், இரண்டு கண்களும் தெரியாத நிலையில் ஒரு முதியவர் தனது பசிக்காக வேலை கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நின்ற இந்த நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் பெரும் நெகிழ்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.