உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவ் மாவட்டத்தில் கோசி கோத்வாலி என்ற பகுதியில் ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு வருகிற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மே 23ஆம் தேதி பொட்டு வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அந்த பெண் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதற்காக சென்றார். அவர் பணம் எடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் அந்தப் பெண்ணுக்கு முகம் மற்றும் தோள் என உடம்பில் 60% காயம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும் நிலையில் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிட் வீசும் போது ஒருவர் நீ எனக்கு கிடைக்கவில்லை எனில் வேறு யாருக்கும் கிடைக்க மாட்டாய் என்று மிரட்டியதாக கூறினார். இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ராம் சிங் ஜனம் பட்டேல் என்பவர் ஆசிட் வீசியது தெரிய வந்தது. இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன் 5 வருடமாக தகாத உறவில் இருந்த நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டதால் கோபத்தில் ஆசிட் வீசியுள்ளார். இவருக்கு உடந்தையாக மனோஜ் யாதவ் மற்றும் சுரேந்திரா யாதவ் ஆகியோர் இருந்தனர். மேலும் இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
