கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் பதிவு செய்துள்ளார். “சாதிய மற்றும் மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்; அத்தகைய கட்சிகள் இருக்கும் கூட்டணியிலும் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்பதில் 2011-ல் எடுத்த முடிவில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார். இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் விசிகவின் பாதை எது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர் சந்திப்பில்… pic.twitter.com/IUklBPbHjh
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 27, 2026
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “யாரைச் சேர்க்க வேண்டும், யாரை வேண்டாம் என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் திமுக தலைமைக்கே உள்ளது” என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். கூட்டணியில் ஒரு கட்சியைச் சேர்ப்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ விசிகவுக்கு உரிமை இல்லை என்று கூறிய அவர், தனது கட்சியின் கொள்கையில் மட்டும் ஒருபோதும் சமரசம் கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்துள்ளார். திருமாவளவனின் இந்த நேர்மையான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
