இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையும் உயருமோ என்ற அச்சம் மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 25 கோடி பேரலுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த இருப்பைக் கொண்டு அடுத்த 2 மாதங்களுக்கு உள்நாட்டுத் தேவையை எந்தவிதப் பிரச்சினையும் இன்றிச் சமாளிக்க முடியும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.