ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பிஜேபூர் பிளாக் சமலைபதார் நர்சரி பகுதியில், “இறைவன் கைவிட்டால் மட்டுமே உயிர் போகும்” என்ற பழமொழிக்கு இலக்கணமாக, ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, இறந்ததாக நினைத்து ஆழமான பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் ஒருவர், 4 நாட்கள் பசி, தாகத்துடன் மரண போராட்டம் நடத்தி 5-வது நாளில் உயிருடன் மீட்கப்பட்ட அசாத்திய சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அந்த வாலிபரை கொடூரமாக அடித்துத் துவைத்த 5 பேர் கொண்ட கும்பல், அவர் இறந்துவிட்டார் எனத் தவறாகக் கணித்து அந்த ஆள்நடமாட்டமற்ற பகுதியில் இருந்த ஆழமான கிணற்றில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளது.

கிணற்றுக்குள் விழுந்தும் உயிர் பிழைத்த அந்த வாலிபர், தொடர்ந்து நான்கு நாட்களாகப் பசி, தாகத்தால் தவித்துத் தனக்கு உதவி கோரி அலறியுள்ளார், ஆனால் அந்தப் பகுதி வெறிச்சோடி இருந்ததால் அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. இறுதியாக 5-வது நாளில், விறகு சேகரிப்பதற்காக அந்தப் பகுதிக்கு வந்த கிராமவாசி ஒருவருக்குக் கிணற்றுக்குள் இருந்து பலவீனமான அலறல் சத்தம் கேட்கவே, அவர் உடனடியாகப் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி அந்த வாலிபரைப் பத்திரமாக மீட்டு, தற்பொழுது பிஜேபூர் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்த போலீஸ் விசாரணையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே அந்த வாலிபர் மாயமானது குறித்து பத்மபூர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது, மேலும் இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாகத் தற்பொழுது இரண்டு பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.