மீன் பிரியர்களுக்கு என்றென்றுமே அசைவ உணவுகளில் இறால் தான் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். வழக்கமாகச் செய்யும் இறால் தொக்கு அல்லது வறுவலுக்குப் பதிலாக, சற்று வித்தியாசமாக நெய், புளி மற்றும் வெல்லம் சேர்த்து நாவூறும் சுவையில் ‘டைகர் பிரான் நெய் ரோஸ்ட்’ செய்து அசத்தலாம். இந்த பிரத்யேக மசாலா ரோஸ்ட், சாதாரண இறால் கிரேவியை விட அட்டகாசமான சுவையிலும் நறுமணத்திலும் இருக்கும்.

இதற்குத் தேவையான மசாலாவை முதலில் புதிதாக அரைக்க வேண்டும். தனியா, வெந்தயம், சீரகம், மிளகு மற்றும் கடுகு ஆகியவற்றை வானலியில் போட்டுப் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். ஆறிய வறுவல் பொருட்களுடன் பூண்டு, சிறிய துண்டு வெல்லம், ஊறவைத்த வரமிளகாய், கெட்டியான புளித்தண்ணீர் மற்றும் முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, சுத்தம் செய்த இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து தயார் செய்து கொள்ளவும். ஒரு வானலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிச் சூடானதும், அரைத்து வைத்துள்ள காரசாரமான மசாலா விழுதைச் சேர்த்து, சிறிதளவு சர்க்கரை மற்றும் உப்பு தூவி நெய் தனியாகப் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

மசாலா நெய்யில் நன்றாக வதங்கியதும், ஊறவைத்துள்ள இறாலை அதில் சேர்த்து மசாலா கெட்டியாக இறாலுடன் ஒட்டி வரும் வரை மிதமான தீயில் வதக்கவும். இறுதியாகக் கமகமக்கும் கறிவேப்பிலையைத் தூவி வதக்கி இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் மணமான, காரசாரமான ‘டைகர் பிரான் நெய் ரோஸ்ட்’ தயார்.