மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள சோலா மந்திர் பகுதிக்குட்பட்ட  கார்ப்பரேஷன் காலனியில் வசித்து வருபவர் ராகேஷ் அஹிர்வார். கடந்த ஜூலை 31-ஆம் தேதியன்று இரவு நேரத்தில் இவர் மதுபோதையில் சமையலை முடித்துவிட்டுத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இவரது கைகள் பட்டு ரிமோட்டின் பட்டன் மாறித் தொலைக்காட்சியின் சேனல் மாறியுள்ளது.

இந்தச் சிறிய தவறால் கோபமடைந்த இவரது மனைவி ராம்மனி அஹிர்வார், இதனால் தொலைக்காட்சி பஸ் ஆகிவிடும் என்று கூறி கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் வீட்டில் இருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதமான கத்தியால் கணவனின் தலை மற்றும் கன்னத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறவே, சத்தம் கேட்டு ஓடிவந்த வீட்டின் உரிமையாளர் இருவரையும் விலக்கிச் சண்டையை நிறுத்தினார்.

சம்பவத்திற்குப் பிறகு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்ற கணவனை மனைவி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கணவனும் மதுபோதையில் இருந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்காப்புக்காகவே மனைவி இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.