புற்றுநோய் (கேன்சர்) என்ற பெயரைக் கேட்டாலே பலரின் அடிவயிற்றில் பயம் எழுந்துவிடும் அளவுக்கு இது ஒரு கடுமையான நோயாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு வகையான புற்றுநோயால் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இருப்பினும், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சிகள் காரணமாக இப்போது கேன்சருக்கான சிகிச்சைகள் மிகவும் எளிதாகிவிட்டன. இந்த நோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையின் ஒரு முக்கிய பக்கவிளைவுதான் முடி கொட்டுவது.
சிகிச்சையின் போது தலைமுடி வேகமாக உதிர்கிறது என்பதைப் பலரும் அறிந்திருந்தாலும், அதற்கான அறிவியல் காரணம் என்ன என்பது பலரும் தெரிவதில்லை. இதுகுறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
டெல்லி ‘ஆக்சன் கேன்சர் மருத்துவமனை’-யின் ‘ஆக்சன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் ஆன்வாலஜி அண்ட் இம்யூனோதெரபி’-யின் இயக்குநர் டாக்டர் ஜே.பி. சர்மா கூறுகையில், “கீமோதெரபியின் முக்கிய நோக்கம் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதாகும். ஆனால், இச்செயல்பாட்டின் போது உடலின் சில ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படலாம்” என்றார்.
நம் தலைமுடியின் வேர்க்கால்கள் மிக வேகமாக வளரும் செல்களால் ஆனவை. கீமோதெரபி மருந்துகள் இந்த வேகமாக வளரும் செல்களையும் தாக்குகின்றன. அதனால்தான் கீமோதெரபியின் போது முடி கொட்டுவது ஒரு பொதுவான பக்கவிளைவாக மாறுகிறது.
வழக்கமாகச் சிகிச்சை தொடங்கி 2 முதல் 3 வாரங்களுக்குள் முடி உதிர்தல் தொடங்கக்கூடும். சில நோயாளிகளுக்குத் தலைமுடி மட்டும் கொட்டலாம்; சிலருக்கு புருவம், கண் இமைகள் மற்றும் உடலின் பிற பாகங்களில் உள்ள முடிகளும் உதிர்வதுண்டு. எனினும், இதில் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது தற்காலிகமானதே ஆகும்.
கீமோதெரபி சிகிச்சைகள் முடிவடைந்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முடிவளரத் தொடங்கும். இருப்பினும், ஆரம்பத்தில் அவற்றின் நிறம் அல்லது அமைப்பு சற்று மாறுபட்டிருக்கலாம். எல்லா கீமோதெரபி மருந்துகளாலும் முடி கொட்டும் என்றோ, எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான தாக்கம் இருக்கும் என்றோ கூற முடியாது.
மேலும் எந்தவொரு மனக் கவலையும் ஏற்பட்டால், நோயாளிகள் தங்களின் புற்றுநோய் நிபுணரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். சிகிச்சையின் போது லேசான ஷாம்புகளைப் பயன்படுத்துவதும், தலைப்பகுதியைச் சரியாகப் பராமரிப்பதும் நல்லது. உடலை வலிமையாகப் பராமரிக்கச் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, முடி மீண்டும் வளர்ந்துவிடும்; ஆனால், கேன்சருக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் முழுமையாக மேற்கொள்வதுதான் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மிகவும் அவசியமானதாகும்.
