டெல்லியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனியாகச் சுற்றுலா சென்றபோது நேர்ந்த கொடூர அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனில் இருந்து நைனிடால் செல்வதற்காக நள்ளிரவில் அவர் ஒரு டாக்ஸியில் ஏறியுள்ளார். நள்ளிரவு 1:30 மணியளவில், ஓட்டுநர் திடீரென பாதையை மாற்றி ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு வண்டியை ஓட்டிச் சென்றார்.

இதனை அப்பெண் தட்டிக்கேட்டபோது, ஓட்டுநர் அவரைத் தாக்கி செல்போனைப் பிடுங்கியதுடன் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்த அந்தப் பெண், உயிருக்குப் பயந்து அருகில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் ஓடிச் சென்று இரவு முழுவதும் அங்கேயே பதுங்கித் தங்கியுள்ளார்.

மறுநாள் காலை காட்டுப்பகுதியிலிருந்து வெளியே வந்த அவர், அந்த கிராம மக்களின் உதவியுடன் காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அந்தப் பெண்ணின் செல்போன் மற்றும் டாக்ஸியைப் பறிமுதல் செய்துள்ளனர்.

டாக்ஸி உரிமையாளர் வேறு ஒரு நபர் என்பதால், தலைமறைவாக உள்ள ஓட்டுநரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டாக்ஸி உரிமையாளர்கள் ஓட்டுநர்களின் பின்னணியைச் சரியாகச் சரிபார்க்க வேண்டும் என நைனிடால் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.