கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில், மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட கூலித் தொழிலாளி பரமேஷ், உண்மையில் அவரது மனைவியாலேயே படுகொலை செய்யப்பட்டது ஒரு மாதத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பரமேஷ் இறந்தபோது, அவரது மனைவி ஆஷா அது மாரடைப்பு என்று கூறி உடலை அடக்கம் செய்துள்ளார்.

ஆனால், கணவர் இறந்த ஒரே மாதத்தில் ஆஷா தனது வீட்டில் வேலை பார்த்து வந்த சந்திரப்பா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தால் சந்தேகமடைந்த பரமேஷின் சகோதரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், புதைக்கப்பட்ட பரமேஷின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ததில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆஷாவும் அவரது காதலன் சந்திரப்பாவும் சேர்ந்து, தூங்கிக்கொண்டிருந்த பரமேஷைத் தலையணையால் அழுத்தி கொலை செய்தது அம்பலமானது.

கள்ளக்காதலை மறைக்கவே இந்தத் திட்டத்தைத் தீட்டியதாக இருவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.