சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்து பிரபலம் அடைய வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் தற்போது பொதுமக்களின் உயிருக்கே உலையாக மாறி வருகின்றன.

சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் சிமெண்ட் மூட்டைகளை வைத்துக்கொண்டு, அவற்றை வேண்டுமென்றே உடைத்து சாலை முழுவதும் கொட்டியபடி அதிவேகமாகச் செல்கின்றனர்.

இதனால் அந்தச் சாலை முழுவதும் சிமெண்ட் துகள்கள் பரவி, மிகப்பெரிய புகைமண்டலம் உருவானது. இதன் விளைவாக, பின்னால் வந்த வாகன ஓட்டிகளுக்கு முன்னால் இருக்கும் பாதை முற்றிலும் தெரியாமல் போய், பெரும் விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழல் உருவானது.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மற்றொரு வாகன ஓட்டி, அந்த இளைஞர்களைத் துரத்திச் சென்று சரமாரியாகக் கேள்வி கேட்டு வீடியோ எடுத்துள்ளார். “தெரிந்து செய்யும் இத்தகைய தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது; இவர்களுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்” என்று அவர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

“>

 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “ரீல்ஸ் மோகத்தில் மற்றவர்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுவது மட்டுமன்றி, பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் இச்செயல் பலரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.