மகாராஷ்டிராவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர், சமூக வலைதளத்தில் அறிமுகமான நபர் ஒருவரை நம்பித் திருமண ஆசைப்பட்டு, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ. 57 லட்சத்தை இழந்து தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர், மூதாட்டியிடம் அன்பாகப் பேசி நம்பிக்கையைப் பெற்று, புனேவில் ஆடம்பர வீடு வாங்கித் தருவதாகக் கூறி மூதாட்டியின் சொந்த வீட்டை விற்கச் செய்ததோடு, அவரது நகைகளையும் அபகரித்துக் கொண்டு தலைமறைவானார்.
விசாரணையில், அனுஜ் சந்தோஷ் திவாரி என்ற அந்த நபர், மேட்ரிமோனி இணையதளங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் விதவை மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களைத் தொடர்பு கொண்டு, திருமண ஆசை காட்டி பணம், நகை மற்றும் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் தொடர் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.
பெண்கள் பெயரில் போலி சிம் கார்டுகள் மற்றும் கடன் பெற்று மோசடி செய்ததோடு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல புகார்களில் சிக்கியுள்ள இந்த நபர், ஒரு வருட தேடுதலுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் விஷ்ணுநகர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
