பெங்களூருவில் பார்சல் டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர், பெண் ஒருவரின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்சல் வழங்க வந்த அந்த நபர், அவசரத் தேவை எனக் கூறி கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அந்தப் பெண் பலமுறை மறுப்புத் தெரிவித்தும், முன்பின் தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று நாகரிகமாகப் கூறியும், அதைப் பொருட்படுத்தாத அந்த நபர், காலணிகளைக் கழற்றிவிட்டுப் பெண்ணின் அனுமதி இன்றி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

தான் பாதுகாப்பற்ற உணர்வதாகக் கருதிய அந்தப் பெண், தனது செல்போனில் கேமராவை ஆன் செய்து கதவைத் திறந்து வைத்துள்ளார். கழிவறையிலிருந்து வெளியே வந்த அந்த நபர், அப்பெண்ணுக்கு முன்னால் அநாகரிகமாக நடந்துகொண்டதாகப் பகீர் புகார் எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அந்தப் பெண், இந்தச் சம்பவத்தைப் பதிவிட்டு பெங்களூரு காவல்துறையினரிடம் நீதி கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவனம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.