உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில், வீடு வாங்குவதில் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக தம்பதியினர் அவர்களது குழந்தைகளின் கண்முன்னேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது அண்டை வீட்டார் ஃபஹீம் என்பவரிடமிருந்து ஒரு அறையுள்ள வீட்டை ₹2.24 லட்சத்திற்கு விலை பேசினார். இதில் ₹2 லட்சத்தை ராஜா ஏற்கனவே கொடுத்துவிட்ட நிலையில், மீதமுள்ள ₹24,000 தொகையைக் கொடுத்து வீட்டைப் பதிவு செய்யக் கோரியுள்ளார்.

ஆனால், ஃபஹீம் தற்போது ₹24,000-க்கு பதிலாக ₹40,000 கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டுள்ளது. ஞாயிறு அன்று நடந்த மோதலுக்குப் பழிவாங்கும் நோக்கில், திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஃபஹீமின் மகன் ஃபர்ஜந்த், அவரது உறவினர் மற்றும் நண்பர் என மூவர் ராஜாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால் ராஜாவையும், அவரது மனைவி ஃபராவையும் சரமாரியாகக் குத்தினர். தலை முதல் வயிறு வரை உடல் முழுவதும் பல இடங்களில் கத்திக் குத்து விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தம்பதியினர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தபோது, ராஜாவின் 7 வயது மகள் அஃப்ஷா மற்றும் 5 வயது மகன் ஆதிஃப் ஆகியோர் அலறிக் துடித்தனர். உயிரிழந்த ஃபராவின் மடியில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை அப்பாஸ், தாக்குதலின் போது கீழே விழுந்தான். குழந்தைகளின் அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாமல், தம்பதியினரின் உயிர் பிரியும் வரை கொலையாளிகள் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஐஜி முனிராஜ் மற்றும் எஸ்எஸ்பி சத்பால் அண்டில் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். கொலையாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து எஸ்எஸ்பி சத்பால் அண்டில் கூறுகையில், வீடு தொடர்பான பணப் பரிவர்த்தனை தகராறே இந்தக் கொலைக்கு முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.