பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென சாலையோரக் கடையில் ‘ஜால்முரி’ (பொரி) வாங்கிச் சாப்பிட்டது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
முராராய் சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது,
“திட்டமிடப்படாத பயணம் என்று சொல்லப்படும்போது, அங்கே கேமராக்கள் எப்படி முன்கூட்டியே தயாராக இருந்தன? கடையின் உட்புறம் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முன்கூட்டியே எழுதப்பட்ட திரைக்கதை. பிரதமரின் பாக்கெட்டில் 10 ரூபாய் நோட்டு இருந்ததைக் காட்டுகிறார்கள். இதையெல்லாம் யாராவது நம்புவார்களா? எஸ்பிஜி (SPG) பாதுகாப்புப் படையினர் மூலம் அனைத்தும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் இது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜார்கிராம் பகுதியில் பிரதமர் மோடி ஜால்முரி வாங்கிச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இது இன்ஸ்டாகிராமில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. எனினும், கடையின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட கேமரா கோணங்களைச் சுட்டிக்காட்டி, இது ஒரு ‘செட்டிங்’ என்று திரிணமூல் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.
இந்தச் சம்பவத்தால் மற்றொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்தத் திடீர் நிறுத்தத்தால், ஜார்கிராம் பகுதியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்துவிட்டு, இறுதியில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு ராஞ்சிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக பாஜக – தேர்தல் ஆணையம் மீது மம்தா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ‘காராப்பொறூ’ விவகாரம் அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
