உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் வேலையின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், வாலிபர் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிகில் என்ற இளைஞர் தனது பெற்றோர் மறைவுக்குப் பிறகு வாடகை அறையில் தனியாக வசித்து வந்தார். சொத்து விற்பனை மற்றும் தரகு வேலை செய்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக வேலை வாய்ப்பின்றி பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். இவருடன் ஒரு வளர்ப்பு நாயும் இருந்து வந்தது.
வழக்கமாகத் தனது உறவினரான தீரஜ் சந்தன் என்பவரது வீட்டிற்கு உணவருந்தச் செல்லும் நிகில், கடந்த திங்கட்கிழமை முழுவதும் வராததால் உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்காததால், தீரஜ் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.
உள்ளே இருந்து எவ்வித பதிலும் வராததாலும், அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நிகில் கட்டிலில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் அவரது வளர்ப்பு நாயும் இறந்து கிடந்தது.
அறை முழுவதும் வாந்தி மற்றும் எலி மருந்து நெடி வீசியதாக போலீஸார் தெரிவித்தனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. “வேலையில்லாத விரக்தியில் இருந்த நிகில், உணவில் விஷம் கலந்து வளர்ப்பு நாய்க்கு முதலில் கொடுத்துவிட்டு, மீதியைத் தானும் உட்கொண்டு உயிரை மாய்த்திருக்கலாம்” என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அறையில் சிதறிக் கிடந்த பொருட்கள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும்போது, உயிரிழப்பதற்கு முன் நிகில் மிகுந்த வேதனையுடன் போராடியிருக்கக்கூடும் என்று போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
