மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவை பிற அணிகளுக்கு ‘டிரேட்’ (Trade) செய்யப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், மும்பை அணி நிர்வாகம் தரப்பில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதனால் ஹர்திக் பாண்டியா அடுத்த சீசனில் மஞ்சள் சீருடையில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்தது.
ஆனால், இந்த தகவல்களை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. “தற்போது வரை ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வது குறித்து எந்தவொரு அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அணியின் ஒட்டுமொத்த செயல்திறன் (Performance review) குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே, வீரர்கள் மாற்றம் குறித்த அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்கு மாறுகிறார் என்ற வதந்திக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
