இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்திய தேசிய அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுபதீப் கோேஷை நியமித்துள்ளது. இவர் டி திலீப்புக்கு பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் தேசிய அணியின் பயிற்சியாளர் குழுவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சீனியர் அணியுடன் சுபதீப் கோேஷின் முதல் போட்டி, எதிர்வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களின் போது இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் வெளிப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தத் தொடர்களில் அணி வீரர்கள் பல கேட்சுகளைத் தவறவிட்டதும், களத்தடுப்பில் செய்த தவறுகளும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டத்திறனைப் பாதித்ததே இந்த முடிவுக்குக் முக்கியக் காரணமாகும்.
அசாம் மாநிலம் திக்பாய் நகரில் 1968-ம் ஆண்டு பிறந்த சுபதீப் கோஷ், ஒரு முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரராவார். ‘ஜாய்’ என்றும் அழைக்கப்படும் இவர், வலது கை நடுவரிசை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் ஸ்பின் பவுலர் ஆவார். இவர் அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். கடந்த 1994-95 சீசனில் அறிமுகமான இவர், மொத்தம் 17 முதல் தர மற்றும் 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 316 ரன்களும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 307 ரன்களும் எடுத்துள்ளார். 2004-ல் தனது கடைசி முதல் தரப் போட்டியிலும், 2005-ல் லிஸ்ட் ஏ கரியரையும் நிறைவு செய்தார்.
கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளர் துறையில் களமிறங்கிய கோேஷ், தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறார். இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிடின் கீழ் இவர் பணியாற்றியுள்ளார்.
இந்தியா அண்டர்-19 அணி, இந்தியா ஏ மற்றும் இந்திய மகளிர் அணி (2021-ல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஃபீல்டிங் பயிற்சியாளர்) போன்ற பல்வேறு வயதுப் பிரிவுகளுக்குப் பயிற்சியளித்துள்ளார். சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ‘இந்தியா ஏ’ அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் கோசுக்கு அனுபவம் உண்டு. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றபோது அதன் சப்போர்ட் ஸ்டாஃப் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார். பின்னர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
