தவெக எம்.எல்.ஏ பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் பிடிபட்ட பணம் பெங்களூருவில் இருந்து வந்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியான திமுக மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையேயான தொடர்புகளைக் கடுமையாக விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தவெக எம்.எல்.ஏ பேரத்தில் பிடிபட்ட பணம் பெங்களூருவில் இருந்து வந்துள்ளது. திமுகவிற்கு பெங்களூரு என்பது அவ்வளவு பாதுகாப்பான இடமா? அல்லது பணத்தை பதுக்குவதற்கு திமுகவிற்கு பெங்களூரு நகர் அவ்வளவு எளிதாக உள்ளதா?” என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
மேலும் டி.கே.சிவகுமார் குறித்துப் பேசிய அவர், “டி.கே.சிவகுமாரின் முழு ஆசீர்வாதமும் திமுகவுக்கு உள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை சொல்வதைக் கூட கேட்கும் நிலையில் இல்லை; மாறாக, திமுக சொல்வதையே டி.கே.சிவகுமார் கேட்டுச் செயல்படுகிறார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த அதிரடிப் பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
