உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் கலப்படம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பன்னீர் மற்றும் சீஸ் தொடர்பான உணவுகளில் வாடிக்கையாளர்கள் திசைதிருப்பப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, இனி மெனு கார்டுகளில் அவை எதனால் தயாரிக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பன்னீர் என்பது முழுக்க முழுக்கப் பாலிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் தாவர எண்ணெய் மற்றும் ஸ்டார்ச் கொண்டு தயாரிக்கப்படும் ‘டெய்ரி அனலாக்’ பன்னீரை அசல் பன்னீர் என்ற பெயரில் வழங்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, உணவகங்கள் தங்களது மெனு கார்டு, பில் மற்றும் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேக்களில் “சீஸ்/பன்னீர் அனலாக்” என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

அனலாக் தயாரிப்புகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல என்றாலும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்புகள் அசல் பன்னீரை விட வேறுபட்டவை. எனவே, வாடிக்கையாளர்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் ஹோட்டல்கள் மற்றும் சப்ளையர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ஸ்ரீதர் துபே-பாட்டில் எச்சரித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டால் 1800-222-365 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் புகார் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.