உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரின் உடைந்த காலைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, மருத்துவர்களே அதை மீண்டும் உடைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷ்மா என்ற ஏழை விதவைத் தாயின் 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மகள், விபத்து ஒன்றில் சிக்கி வலது கால் எலும்பு உடைந்ததால் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என்று தாய் கதறியும் இரக்கமில்லாமல் சிறுமியை அப்படியே படுக்கையில் கைவிட்டுள்ளனர். இதனால் ரேஷ்மா மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய, அவரது உத்தரவின் பேரில் சிறுமிக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், ஆட்சியரிடம் புகார் செய்ததால் ஆத்திரமடைந்த மருத்துவர் சதுர்வேதி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், ரேஷ்மாவிடம் இருந்து எப்படியோ 8,000 ரூபாயை பிடுங்கிக்கொண்டு அரைகுறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து பரிசோதனைக்காகச் சிறுமியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, மருத்துவர்கள் மிகவும் வன்மத்துடன் நடந்து கொண்டுள்ளனர். பரிசோதனை என்ற பெயரில் சிறுமியின் காலை மருத்துவர் சதுர்வேதி பலவந்தமாகத் திருப்பியதில், அறுவை சிகிச்சை மூலம் கூடி வந்த எலும்பு ‘சடாரென’ மீண்டும் உடைந்தது.

வலியால் துடித்த சிறுமியை அங்கிருந்து விரட்டியடித்ததைத் தொடர்ந்து, ரேஷ்மா தனியார் மையத்தில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது எலும்பு மீண்டும் உடைக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்த கொடூரச் செயலால் பாதிக்கப்பட்ட தாய், தற்போது நீதி கேட்டு மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் போராடி வருகிறார்.

இதுகுறித்து முசாபர்நகர் தலைமை மருத்துவ அதிகாரி சுனில் திவேதியாவிடம் கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்களின் தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.