அசாம் மாநிலத்தில் தனது வாழ்வாதாரத்திற்காக வெயிலிலும் மழையிலும் சளைக்காமல் ஐஸ்கிரீம் விற்று வந்த ஒரு முதியவருக்கு நேர்ந்த சோகமும், அதைத் தொடர்ந்து அவருக்குக் கிடைத்த மனிதநேய உதவியும் இணையவாசிகள் பலரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. நாள் முழுவதும் தெருத் தெருவாகச் சென்று ஐஸ்கிரீம் விற்றுவிட்டு, களைப்பு தாங்காமல் சாலையோரத்தில் சற்று நேரம் கண் அயர்ந்து ஓய்வெடுத்துள்ளார் அந்த முதியவர்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இரக்கமற்ற சில சமூக விரோதிகள், அவர் கஷ்டப்பட்டுச் சேர்த்த சிறுகச் சிறுகச் சேர்த்தப் பணத்தையும், அவரிடமிருந்த சில பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். விழித்துப் பார்த்துத் தனது உழைப்பின் பலன் பறிபோனதை அறிந்த அந்த முதியவர், வழி தெரியாமல் சாலையோரத்தில் அமர்ந்து கதறி அழுதுள்ளார்.
வயதான காலத்தில் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக உழைத்த பணம் முழுவதையும் இழந்து, கண்ணீரும் கம்பலையுமாக நின்ற அந்த முதியவரைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், உடனடியாக அவரிடம் சென்று என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார்.
முதியவர் நடந்த கொடூரத்தைக் கூறி அழ, அந்த நபர் அந்தப் பரிதாபகரமான சூழ்நிலையைத் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். “வயதான காலத்தில் உழைத்து வாழ நினைக்கும் ஒரு முதியவரின் வயிற்றில் அடித்துவிட்டார்களே” என்ற ஆதங்கத்தோடு அவர் வெளியிட்ட அந்த வீடியோ, குறுகிய நேரத்திலேயே இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அசாமைச் சேர்ந்த பல நல்நெஞ்சங்களும், இணையவாசிகளும் அந்த முதியவருக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். அவருக்குத் தேவையான நிதியுதவிகள் திரட்டப்பட்டு, அவர் இழந்த பணத்தை விடப் பல மடங்கு அதிகமான தொகை அவருக்கு நேரில் வழங்கப்பட்டது.
உழைத்த பணம் பறிபோன சோகத்தில் உறைந்திருந்த அந்த முதியவர், தனக்கு முன்பின் தெரியாத மனிதர்கள் காட்டிய இந்த அளப்பரிய அன்பையும் உதவியையும் கண்டு உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்ணீர் விட்டார். இக்கட்டான சூழலில் ஒரு ஏழை வியாபாரிக்கு உதவிய அந்த நல்ல உள்ளங்களுக்கும், மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபித்த இணையவாசிகளுக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
