இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அஜிங்கியா ரஹானே, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை உடனடியாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்தார். இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 38.46 சராசரியுடன் 5,077 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 12 சதங்களும், 26 அரைசதங்களும் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை (ODI), 3 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் மொத்தம் 2,962 ரன்களை அவர் சேர்த்துள்ளார். மேலும், 20 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 1 அரைசதத்துடன் 375 ரன்களையும் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 2013-ல் தொடங்கிய தனது நீண்ட கிரிக்கெட் பயணத்தில் 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
தேசிய அணியின் தேர்வாளர்களின் பார்வையில் இருந்து விலகியிருந்தாலும், உள்ளூர் கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்த ரஹானே, 2024-25 பருவம் வரை மும்பை அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். தனது ஓய்வு குறித்துப் பேசிய அவர், “வாழ்க்கையின் எதார்த்தம் என்னவென்றால், எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு. நேரம் வரும்போது அதை மதித்து நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நான் எப்போதும் எனது பேட்டிங்கில் நேரத்தை நம்பியவன், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெற இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன்” என்று சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டுடன் விடைபெற்றாலும், விளையாட்டிலிருந்து முற்றிலுமாக விலகப் போவதில்லை என்றும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் உதவப் போவதாகவும் ரஹானே குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ , மும்பை கிரிக்கெட் சங்கம், சக வீரர்கள், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள தனது ரசிகர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். “அஜிங்கியா என்றால் தோற்கடிக்க முடியாதவன் என்று அர்த்தம், ஆனால் கிரிக்கெட் எனக்கு பலமுறை தோல்வியைக் கற்றுக் கொடுத்தது. என் அணி தோற்றுள்ளது, நானும் தவறுகள் செய்துள்ளேன், ஆனால் நான் எங்குமே தோற்காத ஒரே இடம் உங்கள் இதயங்கள்தான்” என்று தனது உணர்ச்சிகரமான பிரியாவிடைச் செய்தியில் அவர் நிறைவு செய்துள்ளார்.
