பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உலக மருத்துவ உலகை ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளனர். பகல் நேரத்தில் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் இந்தக் குழந்தைகள், பள்ளிக்குச் செல்வது, விளையாடுவது எனச் சாதாரண குழந்தைகளைப் போலவே இயங்குவார்கள். ஆனால், சூரியன் மறைந்து மாலை நேரம் வந்ததும் இவர்களின் நிலைமை முற்றிலுமாக மாறிவிடும். கொஞ்ச நேரத்தில் அவர்களின் முழு உடலும் பலமிழந்து, நடக்கவோ, பேசவோ, கை-கால்களை அசைக்கவோ முடியாமல் முடங்கிவிடும்.

மருத்துவர்களுக்கே சவாலாக மாறிய இந்த விசித்திர நோயால் குடும்பத்தினர் அதிர்ந்து போயினர். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின்  மருத்துவர்கள் இவர்களைப் பரிசோதித்தனர். பகலில் நன்றாக இருந்துவிட்டு, இரவில் மட்டும் உடல் இயங்குவதை நிறுத்திக்கொள்ளும் இதுபோன்ற ஒரு வழக்கை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகளின் தந்தை, தன் பிள்ளைகளுக்குச் சூரிய ஒளியில் இருந்துதான் சக்தி கிடைக்கிறது என்று நம்பினார். ஆனால், மருத்துவர்கள் குழந்தைகளைப் பகலில் வெளிச்சம் இல்லாத இருட்டறைக்குள் வைத்துப் பரிசோதித்தபோதும் அவர்கள் இயல்பாகவே செயல்பட்டனர். இதனால் நோய்க்கும் சூரிய வெளிச்சத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது உறுதியானது. இது ஒரு அரிய மரபணு நரம்பியல் கோளாறாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், இரத்தம், கிராமத்தின் மண் மற்றும் காற்றின் மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டாலும் உண்மையான காரணம் முழுமையாகப் பிடிபடவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by lostvoiceindian (@lostvoiceindian)

இந்தக் குடும்பத்தின் நிலை மேலும் சோகமானது; பெற்றோர் இருவரும் சொந்தப் பங்காளி உறவுமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குப் பிறந்த 6 குழந்தைகளில் 2 பேர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். மற்ற குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் எதுவும் இல்லை. உலக அளவில் சோஷியல் மீடியாவில் கவன ஈர்த்த இந்தச் சகோதரர்களை மக்கள் ‘சோலார் கிட்ஸ்’ என்று அழைக்கத் தொடங்கினர். அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும், இன்றும் தீர்க்க முடியாத மருத்துவப் புதிராகவே இவர்களின் சோகம் தொடர்கிறது.