மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிராகாம் அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அரசியலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மூத்த அரசியல்வாதிகளின் வயது மற்றும் அவர்களது உடல்நிலை குறித்த விவாதங்கள் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.
நாட்டின் மிக உயர்ந்த பதவிகளிலும் சட்டமன்றத்திலும் முதியவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட சிஎன்என் கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிக வயதுடைய சட்டமியற்றுபவர்கள் சேவை செய்வது ஒரு பெரிய பிரச்சனை என்று 58 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணம் 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சராசரி வயது கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் உடல்நிலை குறித்த உண்மையான தகவல்கள் பொதுமக்களுக்கு முழுமையாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதாரண குடிமக்களைப் போல தங்களது மருத்துவப் பதிவுகளை ரகசியமாக வைத்துக் கொள்ள அரசியல்வாதிகளுக்கு உரிமை இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
மேலும், தங்களது கட்சி 70 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் தங்களுக்கு அது பெரிய அளவில் தயக்கத்தையும் அதிருப்தியையும் தரும் என்று 70 சதவீத வாக்காளர்கள் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
