விலங்கு உலகம் வெளியில் பார்ப்பதற்கு எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறதோ, அதற்குள் பல கடுமையான மற்றும் பயமுறுத்தும் உண்மைகளும் மறைந்துள்ளன. அலாஸ்காவில் உள்ள கட்மை தேசியப் பூங்காவில் அண்மையில் பதிவான ஒரு சம்பவம் மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பூங்காவில் பொருத்தப்பட்டிருந்த நேரலை கேமராக்களில் பதிவான தாய் கரடி ஒன்றின் கொடூரச் செயல் அனைவரையும் உலுக்கியுள்ளது.

புரூக்ஸ் நதிக்குப் அருகில் உள்ள  கேமராக்களில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது. அதாவது பெண் கரடி ஒன்று, மற்றொரு கரடியின் குட்டி மீது திடீர் தாக்குதல் நடத்தி அதைக் கொன்றுள்ளது. கொல்லப்பட்ட அந்தக்குட்டி வேறு ஒரு பெண் கரடிக்கு இந்த ஆண்டு வசந்த காலத்தில் பிறந்ததாகும். எல்லாவற்றையும் விட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்தக்குட்டியைக் கொன்றதுடன் அதைத் தின்றும்விட்டது.

சம்பவத்தின் போது  பெண் கரடி தனது இரண்டு குட்டிகளுடன் அங்கிருந்துள்ளது. அதில் ஒரு குட்டி இரண்டரை வயதுடையதாகவும், மற்றொன்று ஒன்றரை வயதுடையதாகவும் இருந்தது. தாக்குதலுக்குச் சில கணங்கள் முன்புவரை அந்தக் குட்டிகள் இறந்த குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால், திடீரென நிலைமை மாறியது. பெண் கரடி சிறிய குட்டியைத் துரத்திப் பிடித்துக் கொன்றுவிட்டு, சுமார் 20 நிமிடங்கள் அதைத் தின்று தீர்த்துள்ளது. அதன் சொந்தக் குட்டிகளும் இதைக் கவனித்துக்கொண்டே நின்றுள்ளன. பின்னர் அந்தத் தாய் கரடி, எஞ்சிய பாகங்களை நிலத்தில் புதைத்து வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பூங்கா ரேஞ்சரும் இயற்கை ஆர்வலருமான மைக் பிட்ஸ்  நேரலை விவாதம் ஒன்றில் விளக்கமளித்தார். அந்தப் பகுதியில் சால்மன் மீன்கள் போதுமான அளவில் இருப்பதால், பசி காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், பொதுவாக ஆண் கரடிகளில் காணப்படும் இனப்பெருக்கத்துக்காகக் குட்டிகளைக் கொல்வது போன்ற நிகழ்வு இதுவல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சிறிய குட்டி பயந்து ஓடியதால், அதன் அசைவு அந்தத் தாய் கரடியின் வேட்டைத் தூண்டுதலைத் தூண்டியிருக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.