உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட சிறிய தாமதத்தால், போதைக்கு அடிமையான மைத்துனன் ஒருவன் தனது சகோதரரின் மனைவியைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குமார் என்பவரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
போதை பழக்கத்திற்குத் தீவிரமாக அடிமையான குமார், சம்பவத்தன்று வீட்டிற்கு வந்து உணவு கேட்டுள்ளார். அப்போது வீட்டிலிருந்த அவரது சகோதரரின் மனைவி உணவு பரிமாறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார், சிறிதும் இரக்கமின்றி வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து அண்ணியின் கழுத்தில் கொடூரமாக வெட்டியுள்ளார்.
கோடாரி வெட்டில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் நிற்காத குமார், வெட்டப்பட்ட தலையை எடுத்து வீட்டின் முன்னிருந்த மரத்தில் தொங்கவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வீட்டின் முன் மரத்தில் தலை தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலையும் தலையையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குமாரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரைப் பிடித்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதை ஆசாமியின் இந்த வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
