நாக்பூர் இட்வாரியில் உள்ள மால்டக்கா சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சித்லா மந்திர் மற்றும் சிவன் கோவிலில் ஜூலை 27 அன்று நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத திருடன் ஒருவன், உண்டியலிலிருந்த சுமார் ரூ.7,000 ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து லாகட்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவான காட்சிகள், இந்தத் திருட்டுச் சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் மற்றும் விசித்திரமான தருணங்களைப் படம் பிடித்துக் காட்டியுள்ளன. நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த அந்தத் திருடன், திருட்டைத் தொடங்குவதற்கு முன்பாகக் கடவுள் சிலைக்கு முன்பாகவும் கேமராவுக்கு முன்பாகவும் நின்று, தனது தவறைக் மன்னிக்குமாறு கைகளைக் கூப்பி வணங்கிப் பிரார்தித்துள்ளார்.
சாமிக்கு முன் கை கூப்பி மன்னிப்பு கேட்பது போல நாடகமாடிய அந்த நபர், அடுத்த நொடியே தனது உண்மையான சுபாவத்தைக் காட்டியுள்ளார். தான் திருடுவது சிசிடிவியில் பதிவாகிவிடும் என்பதால், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளார். பின்னர் உண்டியலில் இருந்த ரூ.7,000 பணத்தைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து நைஸாகத் தப்பியோடியுள்ளார்.
காலை வழக்கம்போல வந்த பூசாரிகள் மற்றும் பொதுமக்கள், கோவிலில் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த லாகட்கஞ்ச் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். சாமி கும்பிட்டுவிட்டுத் திருடிய அந்த நபரின் விசித்திரமான செயல் சிசிடிவியில் பதிவாகியிருக்கும் நிலையில், அந்த நபரைப் பிடிக்கப் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
