கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், நண்பர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதில் ஒரு வாலிபர் முட்டையைச் சாப்பிட்டபோது, அது எதிர்பாராதவிதமாக அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது.
இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேசக்கூட முடியாமல் தன் தொண்டையைப் பிடித்தபடி உயிருக்குப் போராடத் தொடங்கியுள்ளார். உணவகத்தில் அனைவரும் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்குள், அந்த வாலிபரின் முகமாற்றம் மற்றும் மூச்சுத் திணறலை உணர்ந்த அவரது நண்பர் உடனடியாகக் களத்தில் இறங்கினார்.
சற்றும் பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்ட அந்த நண்பர், உடனடியாகப் பாதிக்கப்பட்ட வாலிபரின் பின்புறம் சென்று நின்று, ‘ஹெய்ம்லிச் மேனுவர்’ எனப்படும் புகழ்பெற்ற முதலுதவி தந்திரத்தைப் பயன்படுத்தினார். அதாவது, பாதிக்கப்பட்ட நபரின் வயிற்றுப் பகுதியை பின்புறமாக அணைத்துப் பிடித்து, மேல்நோக்கி பலமாக அழுத்தம் கொடுத்தார்.
அவர் கொடுத்த அந்த உடனடி அழுத்தத்தின் காரணமாக, தொண்டையில் அடைத்துக் கொண்டிருந்த முட்டைத் துண்டு சில நொடிகளிலேயே வெளியே தெரித்து விழுந்தது. இதனால் அடைபட்டிருந்த மூச்சுக்குழாய் உடனடியாகச் சீராகி, அந்த வாலிபர் மீண்டும் இயல்பாக மூச்சு விடத் தொடங்கினார்.
இந்த ஒட்டுமொத்தப் பதற்றமான சம்பவமும் அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
சரியான நேரத்தில், துரிதமாகவும் சரியான முதலுதவி முறையைப் பயன்படுத்தியும் தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞருக்கு இணையவாசிகளும் பொதுமக்களும் பாராட்டு மழ பொழிந்து வருகின்றனர். மேலும், அவசர காலங்களில் ‘ஹெய்ம்லிச்’ போன்ற எளிய முதலுதவி முறைகளை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
