மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோரமான சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதாவது 25 வயது மதிக்கத்தக்க இளம் தாய் பிராச்சி ஜாட் என்பவர், தனது 3 வயதுப் பெண் குழந்தையுடன் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தாய் மற்றும் சேய் இருவரின் உடல்களும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே அதிர்ச்சிகரமான காட்சி காத்திருந்தது. கோரமான விபத்தில் இருவரும் பலியாகியிருந்தாலும், அந்தச் சிறிய குழந்தை தன் தாயின் மார்போடு இறுகியணைத்தபடியே கிடந்தது அனைவரின் ரத்தத்தையும் உறைய வைத்தது. தற்கொலை செய்துகொள்ளும் இறுதித் தருணத்திலும் தாய் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை அந்த ரயிலின் லோகோ பைலட் காவல்துறையினருக்குத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் நர்சிங்பூர் கபூரி கிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த் ஜாட்டின் மனைவி பிராச்சி ஜாட் (25) மற்றும் அவர்களின் 3 வயது மகள் பிரனிஷா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று மதியம் சுமார் 3:30 மணியளவில் சந்தைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறிய பிராச்சி, ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு இந்த விபத்தில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. குடும்பத்தினரின் துயரம் தாங்காமல், சம்பவ இடத்தில் இருந்த ஒரு முதியவர் எதிர்முனையில் வந்த சரக்கு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது அங்கிருந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், தற்கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பெண் வீட்டார் மற்றும் கணவர் தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சில நாட்களுக்கு முன்பு ஜபல்பூர் பர்கி அணையில் நிகழ்ந்த விபத்தில் தாய் மரீனா மெஸ்ஸி மற்றும் அவரது 4 வயது மகன் த்ரிஷான் ஆகியோரின் உடல்கள் தண்ணீருக்கு அடியில் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி மீட்கப்பட்ட சோக நிகழ்வை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
