ஹரியானா மாநிலம் குருகிராமத்தில், தொழிலதிபர் ஒருவரை காதலில் விழவைத்து, மிரட்டி, போலி வழக்குகள் போடுவதாக அச்சுறுத்தித் திருமணம் செய்துகொண்ட வர்ஷா என்ற பெண்ணின் மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. மோசடி மற்றும் நில ஆக்கிரமிப்பு புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வர்ஷா மீது, அவரது கணவர்களே பல தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். விசாரணையில், வர்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 13 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆய்வக உரிமையாளர் சச்சின் சிங் ராஜ்புத் காவல்துறையினரிடம் அளித்த புகாரில், வர்ஷா குருகிராமத்தில் உள்ள தனது ஆய்வகத்தில் வரவேற்பாளராக வேலை செய்து வந்ததாகத் தெரிவித்தார். ஆய்வகத்தின் பணப் பரிமாற்றங்களில் முறைகேடு மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் காரணமாக சச்சின் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளார். இதற்குப் பழிவாங்கும் நோக்கில், வர்ஷா சச்சினின் மருமகனை தனது வலையில் வீழ்த்தியதுடன், ஹோட்டலில் சச்சினின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தார். இதனால் சச்சின் 62 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டது.
சிறையிலிருந்து விடுவிப்பதற்கும், எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்வதற்கும் ஈடாக மாதத்திற்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் தரும் அந்த ஆய்வகத்தின் உரிமையை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று வர்ஷா நிபந்தனை விதித்துள்ளார். அவமானம் மற்றும் சமூக அழுத்தத்தின் காரணமாக சச்சின் அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறை விசாரணையில் சச்சின் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வர்ஷாவின் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.
வர்ஷாவின் மூன்றாவது கணவர் சந்தீப். இவர் குருகிராமத்தில் ரியல் எஸ்டேட் வணிகம் செய்யும் நிலையில், வர்ஷா 2023-ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தில் வரவேற்பாளராகச் சேர்ந்ததாகத் தெரிவித்தார். வர்ஷா தனக்குத் தேநீரில் போதைப்பொருள் கலந்து கொடுத்துவிட்டு, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகச் சந்தீப் குற்றம் சாட்டியுள்ளார். 2023 ஜூன் மாதத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர், ஆனால் வர்ஷா தனது முந்தைய இரண்டு திருமணங்கள் பற்றிய உண்மையை முழுமையாக மறைத்துவிட்டார். மேலும் பல இளைஞர்கள் மீது பாலியல் வன்கடுமை மற்றும் கடத்தல் போன்ற வழக்குகளை வர்ஷா பதிவு செய்துள்ளதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
