உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த செல்போனை எடுக்கக் குதித்த மாணவர் ஒருவர், ரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த குல்ஷன் என்ற அந்த மாணவர், சோனிபட்டில் டிப்ளமோ படிப்பைத் தொடர அம்ரபாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ரயிலின் வாசல் அருகே நின்றபடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக போன் கீழே விழுந்துள்ளது. இருட்டையும் ரயிலின் வேகத்தையும் கவனிக்காமல், போனை மீட்கும் பதற்றத்தில் அவர் கீழே குதித்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த குல்ஷன், தனது குடும்பத்தின் மூத்த மகன் என்பதால் அவர் மீது குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இரவு 11 மணியளவில் இந்தத் தகவலைக் காவல்துறை தெரிவித்தபோது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இக்தில் பகுதி போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு செல்போனுக்காக இளம் மாணவர் தனது உயிரைப் பறிகொடுத்த இந்தச் சம்பவம், ரயில் பயணத்தின் போது வாசலில் நின்று செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கசப்பான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.