மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா பகுதியில், ஐந்து நாட்களாகக் காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் நசீர் அலி என்பவர் துண்டு துண்டாகக் கொலை செய்யப்பட்டுக் கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் மறுநாளே கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் தாமதமான நடவடிக்கையைக் கண்டித்துப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நசீர் அலியின் மனைவியின் முறையற்ற உறவுதான் இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக ரிஸ்வான் ஹசன் மண்டல் மற்றும் சாகர் கெய்ன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பதுரியா பகுதியில் உள்ள பல்வேறு கால்வாய்களில் இருந்து நசீர் அலியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ரிஸ்வான் ஹசன் மண்டல் என்பவர் உள்ளூர் வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

தற்போது இருவரையும் போலீஸ் காவலில் எடுத்துள்ள அதிகாரிகள், இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், கொலையின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.