மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் ஒருவரே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கலந்த டீ கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ப்வா பகுதியைச் சேர்ந்த நூர் பாய் (30) என்ற பெண், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை டீயில் கலந்து தனது ஏழு, ஐந்து மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, தானும் அதைக் குடித்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது அந்தத் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்பு அல்லது தகராறு காரணமாக இந்தப் பெண் இத்தகைய விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கூலி வேலைக்காகக் குஜராத் சென்றிருந்த அவரது கணவர் முகேஷ் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு தாயே தனது பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.