உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராதிகா (24) என்ற இளம்பெண், தனது கணவர் புதிய செல்போன் வாங்கித் தரவில்லை என்ற காரணத்திற்காகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ராதிகாவின் கணவர் ஆஷிஷ், ஒடிசாவில் துணி வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை ராதிகா தனது கணவரை அழைத்து, புதிய செல்போன் வாங்க ₹10,000 கேட்டார். ஆனால், கையில் பணம் குறைவாக இருந்ததால் ஆஷிஷ் ₹2,000 மட்டும் அனுப்பிவிட்டு, சில நாட்களில் மீதிப் பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார்.

இதில் அதிருப்தியடைந்த ராதிகா, வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கால்நடை கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ராதிகாவின் 2 வயதுக் குழந்தை ‘வான்ஷ்’ அழுதுகொண்டே தனது தாயைத் தேடிச் சென்றபோதுதான் இந்தச் சம்பவம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சாதாரண செல்போன் ஆசை, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.