சென்னை பெருங்குடி அருகே உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வந்தவர் நகை அடகு கடை உரிமையாளர் பாபுலால். இவரது மனைவி சென்னி தேவி (43). குடும்பத்துடன் வசித்து வந்த இவர்களுக்கு ராகேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தந்தையார் உறவினர் துக்க காரியத்திற்காக ராஜஸ்தான் சென்றிருந்த சூழலில், வீட்டில் சென்னி தேவி தனது பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை, எதிர்பாராத விதமாக எழுந்த மகன் ராகேஷ், உறக்கத்தில் இருந்த தனது தாயின் கழுத்தை துண்டால் நெரித்து, கத்தியால் குத்தி, பின்னர் உரலால் கடுமையாகத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சென்னி தேவியின் மகள், அலறியடித்து உதவி கோரியுள்ளார். அவரது கூச்சலைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ததாகக் கூறப்படும் ராகேஷை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ராகேஷ் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக கடந்த சில மாதங்களாகத் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று மாத்திரைகளை உட்கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த மன உளைச்சல் காரணமாகவே அவர் தனது தாயாரைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
