சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுவன் தனது தாயை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் தனக்குக் கேம் விளையாடுவதற்கு மொபைல் போன் தர மறுத்ததற்காகவும், கையில் இருந்த மொபைலைப் பிடுங்கிக் கொண்டதற்காகவும் தனது தாயின் முதுகில் சரமாரியாகப் பலமுறை குத்தியும், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும் தாக்குதல் நடத்தியுள்ளான். பெற்ற தாயிடமே ஒரு சிறுவன் இவ்வளவு வன்முறையைக் கையாண்டது, பல பெற்றோர்களை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வீடியோவில், சிறுவன் ஆத்திரத்தில் தாயைத் தாக்குவதும், தாய் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது. இடையில் மற்றொரு சிறுவன் வந்து தாயைப் பாதுகாக்க முயற்சிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

தற்போது இந்த வீடியோவை ஆதேஷ் சுக்லா என்பவரின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இன்றைய நவீன உலகில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் ஸ்க்ரீன் டைம்  மற்றும் மொபைல் கேமிங் மோகம், அவர்களது மனநலனை எவ்வளவு மோசமாகப் பாதிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் இத்தகைய தீவிர வன்முறைப் போக்குகள், குடும்ப உறவுகளைச் சிதைத்து வருகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பழக்கவழக்கங்களைக் கண்காணித்து, இத்தகைய வன்முறைப் போக்கை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.