பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸுக்கும், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இடையேயான மோதல் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. பாமக-விற்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர் என அன்புமணியை அங்கீகரித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அவருக்குக் கடிதம் அனுப்பியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அன்புமணி தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தனது தலைவர் பதவியை நீட்டித்துக் கொண்டதாகவும், கட்சி அலுவலகத்தின் முகவரியைத் தவறாகப் பதிவு செய்து ஆணையத்தை ஏமாற்றியுள்ளதாகவும் ராமதாஸ் அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அப்பாவே மகனுக்கு எதிராகச் சின்னம் மற்றும் பதவி தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ளது.
