தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தனது கட்சியின் தேர்தல் பரப்புரைகளை எவ்வித சட்டச் சிக்கலுமின்றி நடத்தத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து அவர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தக் குழுவில் தவெக இணைப்பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட 25 முக்கிய வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிகள், காவல்துறை அனுமதி மற்றும் தேர்தல் பரப்புரைகளின் போது எழும் சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கும், கட்சி நிர்வாகிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் இந்தக் குழு செயல்படும். ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் பரப்புரைக்குத் திட்டமிட்டுள்ள நிலையில், இத்தகைய ஒரு பலமான சட்டக் குழுவை விஜய் அமைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
