சமூக வலைத்தளங்களில் வெறும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களை அள்ள வேண்டும் என்ற கண்மூடித்தனமான மோகத்தில், இளைஞர்கள் தங்களின் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருவது தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொள்ள, அவருக்கு மேல் அசுர வேகத்தில் ரயில் கடந்து செல்லும் மிரள வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கரமான ஸ்டண்டின் போது அந்த வாலிபருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றாலும், பார்ப்போரை நெஞ்சு படபடக்க வைக்கும் இந்த அலட்சியமான செயல் இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
ஆன்லைன் புகழுக்காகவும், வைரல் கன்டென்ட் (Viral content) உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான சவால்களைக் கையில் எடுப்பது தங்களின் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
தண்டவாளத்தில் நடக்கும் ஒரு சிறிய கணக்குத் தழுவல் கூட மரணத்தைத்தான் பரிசாகத் தரும் என்பதை உணராமல் வாலிபர் செய்த இந்த காரியத்தைத் தொடர்ந்து, ரயில்வே துறையும் உள்ளூர் நிர்வாகமும் பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன.
ரயில்வே வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதோ அல்லது இதுபோன்ற மரண ஸ்டண்டுகள் செய்வதோ சட்டப்படி கடுமையான குற்றமாகும். இணையப் புகழை விட மனித உயிரே மேலானது என்பதை உணர்ந்து, இதுபோன்ற ஆபத்தான வீடியோக்களை யாரும் சமூக வலைத்தளங்களில் ஊக்குவிக்க வேண்டாம் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் அதிரடியாக எச்சரித்துள்ளனர்.
