சமூக வலைத்தளங்களில் லைக்ஸ், வியூஸ் மற்றும் ஃபாலோயர்களைப் பெற வேண்டும் என்ற வெறியில் மக்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கு அத்தாட்சியாக, ஒரு தந்தை தனது சொந்தக் குழந்தையின் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் (Reels) வீடியோ எடுத்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு சிறுவன் கையில் நமது தேசியக்கொடியை ஏந்தியபடி வீட்டின் உயரமான பால்கனி சுோ மேல் நின்றுகொண்டிருக்கிறான். கீழே அவனது தந்தை இரு கைகளையும் நீட்டி குழந்தையைப் பிடிக்கத் தயாராக நிற்க, அடுத்த சில நொடிகளில் அந்தச் சிறுவன் எவ்வித பயமும் இல்லாமல் பால்கனியில் இருந்து கீழே குதிக்கிறான்.

கீழே நின்ற நபர் அந்தப் பச்சைக் குழந்தையை ஒரு பந்தைப் பிடிப்பது போல அந்தரத்தில் லாவகமாகப் பிடித்து, பின்னர் இரண்டு முறை காற்றில் தூக்கிப் போட்டு கேமராவைப் பார்த்துத் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்.

ஒருவேளை நூலிழையில் தவறியிருந்தாலோ அல்லது கையை விட்டு நழுவியிருந்தாலோ அந்தக் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் இந்த ஆபத்தான ஸ்டண்டைப் பார்த்த நெட்டிசன்கள், இது என்ன மாதிரியான பைத்தியக்காரத்தனம் என்று அந்தத் தந்தைக்கு எதிராகக் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இது ஒரு தீவிரமான மனநோய் என்றும், இப்படிப்பட்ட பொறுப்பற்ற பெற்றோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களின் குமுறல்களையும் ஆத்திரத்தையும் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.