பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாவட்டத்தில், 11 வயது சிறுவன் காணாமல் போனது தொடர்பாக ‘ஜின்’ (ஆவி) மீது காவல்துறையினர் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல் காணாமல் போன தனது மகனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது தந்தை தட்சசீல காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘ஜின்’ என்று அழைக்கப்படும் அலௌகிக சக்திகளே தனது மகனை ஆசை காட்டி கடத்திச் சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளதாகவும், அப்போதெல்லாம் தனது மகன் தானாகவே வீடு திரும்பிவிடுவான் என்றும், ஆனால் இம்முறை 10 நாட்களாகியும் திரும்பாததால் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசித்திரமான புகார் பாகிஸ்தான் சட்ட அமைப்பில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்றதொரு சம்பவம் லாகூரில் ஏற்கனவே நடைபெற்றுள்ளதும், அது தொடர்பான வழக்கு லாகூர் உயர் நீதிமன்றம் வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணைக் கடத்தியதாக ஜின் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க, அந்நாட்டு நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவையே (SIT) அமைத்து உத்தரவிட்டிருந்தது. நவீன அறிவியல் வளர்ந்துள்ள இந்த 2026-ஆம் ஆண்டிலும், இத்தகைய நம்பிக்கைகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது உலக அளவில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
