சீனாவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு அதிகாரி விண்ணப்பதாரர் ஒருவரை அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பாஸ் ஜிபின்’ என்ற வேலைவாய்ப்புத் தளத்தில் விண்ணப்பித்த ஒரு பட்டதாரி இளைஞரிடம், வார இறுதி விடுமுறை இல்லாத வேலைக்கு வர முடியுமா என்று அந்நிறுவன அதிகாரி கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞர், “விடுமுறை இல்லாத வேலையை என்னால் ஏற்க முடியாது” என்று பதிலளித்துள்ளார். இதைக் கேட்டு கேலி செய்த அந்த அதிகாரி, “வெறும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுக்கு வார இறுதி விடுமுறை ஒரு கேடா?” என்று மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்றது. அந்த அதிகாரி, “இனி உங்களை எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்க மாட்டோம், நீங்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளீர்கள்” என்றும் மிரட்டியுள்ளார்.
இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, சம்பந்தப்பட்ட ‘சைனா லைஃப் இன்சூரன்ஸ்’ நிறுவனம் மற்றும் வேலைவாய்ப்புத் தளம் ஆகியவை அந்த அதிகாரி மீது விசாரணை நடத்தி, அவருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை குறித்த விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் சீனாவில் கிளப்பியுள்ளது.
