நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் மற்றும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரபல நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள். ராஜினாமா செய்யுங்கள். நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் உறுதுணையாக நிற்கிறேன். நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன், ஒரு ஜனநாயக இந்தியாவிற்காகவும், முறையான சீர்திருத்தக் கல்விக்காகவும் குரல் கொடுக்கிறேன்” என்று திட்டவட்டமாகத் குறிப்பிட்டுள்ளார். மேலும், சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் போன்ற போராட்டக்காரர்களைக் குறிப்பிட்டு, “தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்” என்றும் தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து அந்தப் பதிவில், எந்தவிதத் தடையுமின்றி வெளிப்படையாகச் செயல்படும் ‘ஜென் Z’ தலைமுறையினரைப் பாராட்டியுள்ள ஜோதிகா, “உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் இந்தப் போராட்டம் மூலம் நிரூபித்துள்ளீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அச்சத்தின் பிடியில் இருந்த சூழலை மாற்றி, தங்களது நியாயமான குரலை எழுப்பத் தூண்டியதற்காக ‘சிஜேபி’ இயக்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “அழுத்தத்தை உடைத்ததற்கு நன்றி, எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சிஜேபி.. ஜெய் ஹிந்த்” என்று தனது தேசப்பற்றையும் நீட் முறைகேட்டுக்கு எதிரான எதிர்ப்பையும் மிகத் தீவிரமாகப் பதிவு செய்துள்ளார். மேலும் இதே போன்று பல பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
