தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதையின் நாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ள செய்தி திரை உலகிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சாணி காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கித் தனக்கெனத் தனி முத்திரை பதித்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவூவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக பிரபல நடிகை வாமிகா கபி நடித்துள்ளார்.
அதீத வன்முறையும், அழுத்தமான காதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தொடக்கம் முதலே சினிமா பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, படத்தின் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளுக்காக தணிக்கைக் குழு இத்திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி சான்றளித்துள்ளது. லோகேஷ் கனகராஜின் வித்தியாசமான தோற்றமும், அருண் மாதேஸ்வரனின் தயாரிப்பு பாணியும் சேர்ந்து திரையரங்குகளில் ஒரு புதிய அதிரடி அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ஜூலை இறுதி வாரத்தில் வெளியாகவிருந்த இத்திரைப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், முதன்முறையாக நாயகனாகக் களம் இறங்குவதால், இப்படத்தின் வர்த்தக மதிப்பும் வசூல் எதிர்பார்ப்பும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 7 அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படம், லோகேஷ் கனகராஜின் திரைப்பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமையுமா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்தத் திரை உலகமும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
