உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்த ‘ஹாரி பாட்டர்’ திரைப்பட வரிசையின் அனைத்து 8 பாகங்களும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. திரைப்படத் தொடரின் முதல் பாகம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், ‘பேக் டூ ஹாக்வார்ட்ஸ்’   நிகழ்வின் கீழ் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வருகிற ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 3 வரை உலகெங்கிலும் உள்ள முக்கிய திரையரங்குகளில் ஹாரி பாட்டர் திரைப்படங்களின் சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது. முதல் பாகமான ‘ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன்’ படம், முன்பு திரையரங்குகளில் காட்டப்படாத 10 நிமிடங்களுக்கும் அதிகமான கூடுதல் பின்னணிக் காட்சிகளுடன்  புதிய வடிவில் திரையிடப்பட இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏஎம்சி , ரீகல் , சினிமார்க்  உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற முன்னணி திரையரங்கு நிறுவனங்களில் இப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கப்படவுள்ளது. திரையரங்குகளில் மீண்டும் ஹாக்வார்ட்ஸ் மந்திர உலகத்தைக் கண்டு ரசிக்க விரும்பும் ரசிகர்கள், தங்களின் உள்ளூர் திரையரங்கு பட்டியல்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுச் செயலிகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

2001-ஆம் ஆண்டு தொடங்கி 2011-ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்த இந்த 8 பாகங்களையும், மீண்டும் பெரிய திரையில் 4K தரத்தில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், பழைய தலைமுறை ரசிகர்கள் மட்டுமல்லாது புதிய தலைமுறை பாட்டர் ரசிகர்களும் அலாதி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.