உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், அசன்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த தௌரியா கிராமத்தில் இன்ஸ்டாகிராமில் கொடிகட்டிப் பறந்த மூன்று சகோதரிகள் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பல லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷி (18) ஆகிய இந்த மூன்று சகோதரிகளும் தங்களது பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வந்துள்ளனர். இந்த நிலையில், தங்களது வீடியோக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக கேமராமேனாகவும், வீடியோக்களில் கணவராகவும் நடித்து வந்த விகாஸ் என்ற வாலிபரை அம்மூன்று பேரும் ஒரே நேரத்தில் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், பெற்றோர்கள் தங்களுக்கு வேறு இடங்களில் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதை அறிந்த இந்தச் சகோதரிகள், தாங்கள் ஆயுள் முழுவதும் ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்ற விநோதமான முடிவை எடுத்துள்ளனர். அதற்காகத் தங்களது வீடியோக்களுக்கு உதவி வந்த கேமராமேன் விகாஸையே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்ட அவர்கள், கடந்த ஜூலை 17-ஆம் தேதி அருகில் உள்ள சாமுண்டா மாதா கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு யாருடைய இல்லாத நிலையில் விகாஸ் மூலம் ஒரே நாளில் தங்களுக்குச் சிந்தூரம் இடச் செய்து முறைப்படி தாங்களாகவே முன்வந்து திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
View this post on Instagram
பொதுவெளியில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் சமூக அமைப்புகளும், இந்துத்துவ அமைப்புகளும் இந்த விசித்திரத் திருமணத்திற்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சனாதன தர்மத்திற்கும், நமது சமூக நெறிமுறைகளுக்கும் மாறாக இந்தத் திருமணம் நடந்துள்ளதாகக் கூறி அவர்கள் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதற்கிடையே, கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கையில், கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, பூசாரி இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாகத் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களுக்கு எதிராகக் கிளம்பிய கண்டனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் பதிலளிக்கும் விதமாக, அந்த மூன்று சகோதரிகளும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்களது தரப்பு நியாயத்தை வெளிப்படையாக விளக்கியுள்ளனர். அதில், “நாங்கள் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்; ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாது என்பதற்காகவே நாங்கள் மூவரும் சேர்ந்து ஒரே நபரைத் திருமணம் செய்தோம். ராமரின் தந்தை தசரத மன்னருக்குக்கூட மூன்று மனைவிகள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் 18 வயதைக் கடந்த, சுய அறிவோடு சிந்திக்கக்கூடியவர்கள் என்பதால் எங்கள் விருப்பத்தின் பேரிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பூர்வ வயது எட்டியுள்ளதால் தங்கள் முடிவில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கிடையில் அந்த கேமராமேன் தன்னுடைய 3 மனைவிகளுடன் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வருவது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நெட்டிசன்கள் பலரும் பலவாறு விமர்சித்து வருகின்றனர்.
