கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவப் பரிசோதனையில் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர் குறித்து மருத்துவர்கள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் விமானப் பணிப்பெண் பயிற்சிக்காக குழித்துறை பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்து வந்தது தெரியவந்தது. அதே பாடப்பிரிவில் 17 வயது சிறுவன் ஒருவரும் படித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் இல்லாத நேரங்களில் அவரது வீட்டுக்குச் சென்ற இளம்பெண், சிறுவனை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவு கொண்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும், இந்த விவகாரம் குறித்து தனது பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் இருந்த நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், 19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கர்ப்பமாக உள்ளதால், அந்த இளம்பெண் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
